கட்டுரை

அவருக்கு அரசியல் ஆசான் புத்தகங்களே

ராவ்

அதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளராக நியமிக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பும், பின்பும் பல முக்கியமான கட்டங்களிலும் ஜெயலலிதா அவர்களைப் பத்திரிகையாளன் என்ற முறையில் சந்திக்க முடிந்தது. என்னிடம் சற்று பொறுமை காட்டுவார். அவரை மிகவும் மதித்து பேசுவது என் வழக்கம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். நான் சந்திக்கும் போதெல்லாம், அவர் நாற்காலிக்கு எதிரே உள்ள மேஜையிலோ அல்லது டீப்பாயிலோ புத்தகங்கள் இருக்கும். இரண்டு மூன்று புத்தகங்கள் பிரித்தபடி இருக்கும். அவர் ஒரு புத்தகத்தை மட்டும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உள்ளவர் அல்ல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று புத்தகங்கள் இடைவெளி விட்டு படிக்கும் பழக்கம் உள்ளவர் என்று அறிந்தேன்.

வெண்ணிற ஆடையில் நடித்த புதிதில், விகடன் அலுவலகத்தில் நடத்திய போட்டி ஒன்றில் குழந்தைகளுக்கு பரிசு தர ‘ஜெ’ வந்தார். அப்போதே அவர் கையில் ஒரு தடிமனான ஆங்கில புத்தகம் இருந்தது. அவர் நண்பர்களை விட அறிவுபூர்வமான புத்தகங்களை நாடுபவர் என்று புத்தகக் கடைக்காரர்கள் சொன்னதுண்டு.

உலக அரசியல் அறிவு அவருக்கு நிரம்ப இருந்தது. ஒரு சமயம் துக்ளக் இதழில் அவர் எழுதிய கட்டுரைகளில் அது வெளிப்பட்டது. வாரிசு தேடிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் இந்த அறிவைக் கண்டு பிரமித்து, அவரை கட்சியில் சேர்க்க விரும்பினார். எம்.ஜி.ஆர் ‘ஜெ’யிடம் முதலில் திராவிட இயக்கம் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளச்சொன்னார். ஜெயலலிதா கணக்கற்ற புத்தகங்களை தேடித் தேடி படித்திருக்கிறார். பிராமணர் அல்லாதார் இயக்கம் பற்றி அவர் அறிந்து கொண்டதும், அதன் நியாயங்களைப் புரிந்து கொண்டதும் எம்.ஜி.ஆருக்கு வியப்பளித்திருக்கிறது. கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தது அதனால் தான்.

உண்மையில் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசான் புத்தகங்களே என்று தோன்றுகிறது. ஒரு முறை அவரிடம் அந்த கட்சியில் இருந்த ஒரு தலைவரைப் பற்றி நல்ல அபிப்ராயம் கூறினேன். “உங்களிடம் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்றேன்.  “அவரை நம்ப முடியாது... வில்லின் வணக்கம், வணக்கம் இல்லை” என்றார் ஜெ.!  திருக்குறள்!!

புத்தகங்கள் அவருக்கு திடமான மன உறுதியை கொடுத் தன போலும்! தனிமைக்கு தோள் கொடுத்த ‘புத்தக நண்பர்களே’ அவரை உருவாக்கின என்று கருதுகிறேன். காந்தியடிகள், அம்பேத்கர், சேகுவாரா, மாசேதுங் போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் அவரது புத்தக அலமாரியில் இடம் பெற்றன. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, விதுர நீதி போன்ற புத்தகங்கள் உண்டு. நூலகம் போல புத்தகங்கள் பகுதி வாரியாக வைக்கப்பட்டிருந்தன.

படிப்பதால் வந்த மன உறுதியால் எதிலும் ‘சராசரி’ பார்க்கும் மனோபாவமோ, சமரசம் செய்து கொள்ளும் எண்ணமோ அவரிடம் துளியும் கிடையாது. கொள்கைப் பரப்புச் செயலாளராக தன் பணி என்ன என்பதை கேட்டறிந்தவர், அதை கடைபிடிப்பதில் தயவு தாட்சண்யம் காட்டவில்லை. கட்சிப் பொது கூட்டங்களுக்கு வர ஒப்புக்கொண்டு பிறகு போகாதவர்கள் யாராக இருந்தாலும் நோட்டீஸ் அனுப்பினார். எம்.ஜி.ஆரிடம் கேட்காமலேயே! ஆர்.எம்.வீரப்பனுக்கும் நோட்டீஸ்! இதனால் கட்சியில் எதிர்ப்புகள் ஏற்பட்டன!

சொல்லப்போனால் ராஜ்யசபை எம்.பியாக இருந்தபோது, எம்.ஜி.ஆர் அனுமதிக்கெல்லாம் காத்திராமல் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவர் ஆற்றிய உரையை இந்திராகாந்தி வியப்போடு கேட்டார். ராஜ்ய சபையில் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த அதே இடம் இவருக்கு தரப்பட்டிருந்தது. ராஜ்யசபை தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் இவர் பேச்சை பாராட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

ஒரு சமயம் கருத்து வேறுபாடு காரணமாக ராஜ்ய சபை பதவியை ‘ஜெ’ ராஜினாமா செய்தார். ‘ஆர்.வி’ அதை ஏற்காமல், அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்தார். அதோடு,‘ஜெயலலிதா தமிழ்நாட்டு பிரச்சனைகளை நன்றாக பேசக்கூடியவர். அதனால் தமிழ்நாட்டுக்கு லாபம். சமாதானப் படுத்துங்கள்’ என்று ஆர்வி கூறியதாக தகவல். ஜெயலலிதாவின் ஆற்றல் மீது எம்.ஜி.ஆருக்கு அளவிட முடியாத நம்பிக்கை இருந்திருக்கிறது. ‘ஜெ’ அதிரடியாக சில செயல்கள் செய்தபோதும் அவரைக் கைவிட எம்.ஜி.ஆர் தயாராக இல்லாததற்கு இதுவே காரணம். உண்மையில் ‘ஜெ’ எடுத்த சில அரசியல் முடிவுகள் தவறாகப் போனதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

‘ஜெ’, ‘ஜா’ என்று அதிமுக பிரிந்தபோது, ‘ஜா’ அணியினர் ஜெயலலிதாவிடம் சரண் அடை நேர்ந்தது அவரது பலத்தை அப்போதே புரியவைத்தது. ஒரு காட்சியைப் பாருங்கள்!

 ‘எங்கள் அணிக்கு ஜெயலலிதா பொதுச்செயலாளர்’ என்று நாவலர் நெடுஞ்செழியன் நிருபர் கூட்டத்தில் அறிவித்தார். நிருபர்கள் அடுத்து ஒரு கேள்வி எழுப்பினர். நெடுஞ்செழியன் பதில் கொடுக்க ஆரம்பித்தார். ‘ஜெ’ கையை உயர்த்தி அவர் பேசுவதை நிறுத்தச்சொன்னார். ‘இனி பதில் சொல்ல வேண்டியது என் பொறுப்பு’ என்றார்! நாவலர் கப்சிப் ஆனார். அந்த நிமிடத்திலிருந்து ‘ஜெ’யின் அரசியல் ஆளுமை துவங்கியது. கடைசியில் அவரது அணியிடம் ஜானகியும் சரணாகதி. இரட்டை இலை சின்னம் திரும்பக் கிடைத்தது. அதிமுக பிரிவால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக இடைத்தேர்தலிலேயே தோல்வி கண்டது. அடுத்த தேர்தலில் ‘ஜெ’ முதல்வர் ஆனார்!

நினைத்ததை சாதிக்கும் வரை போராடும் குணம் அவருக்கு இருந்தது. அதை அவரது சிந்தனையில் புகுத்தியது சிலரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களாகவே இருக்க வேண்டும். வழி நடத்துபவராகவே தான் இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் இருந்த நேரத்தில் ‘ஜெ’க்கு கட்சியில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. அப்போது பொதுத்தேர்தல் வந்தபோது அவர் இரவும் பகலும் கட்சியின் வெற்றிக்கு பிரசாரம் செய்தார். கிட்டத்தட்ட 350 பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். சமீப தேர்தலிலும் அவரது உழைப்பை எண்ணிப்பாருங்கள்!

சமீப தேர்தலில் கூட்டணியே வேண்டாம் என்ற அவரது முடிவு கட்சி தலைவர்கள் பலரை கவலை கொள்ளச் செய்தது உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் பலமற்று இருப்பதாக உறுதியாக எடுத்துரைத்தார். அவரது கணிப்பு சரியாகத்தான் ஆயிற்று.  அரசியலில் தனது சில முடிவுகளை மாற்றிக்கொள்ள அவர் அஞ்சியதில்லை. மாற்றம் இயற்கையானது. இந்தியை திணித்த ராஜாஜி பின்னர் இந்தியை எதிர்க்கவில்லையா?

ஈழப் பிரச்சனையில் ஆரம்ப கருத்து வேறாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவது அவரால் பொறுக்க முடியவில்லை. அதற்கு பிறகு அவர் கருத்து மாறியது. காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டை நாடியது அவரது தீர்க்கதரிசனமான முடிவு.

சில பிரச்சனைகளில் அவர் வீம்பு காட்டிய சம்பவங்கள் உண்டு. ஆனால் அதற்கான காரணங்களை அவர் கூறாமல் ‘மவுனம்’ சாதித்ததும் ஒரு சாமர்த்தியம்தான். எதிர்க்கட்சியினர் என்ன எரிச்சலூட்டினாலும் அதற்கெல்லாம் பதில் சொன்னதில்லை. பேட்டிகளின் போது இடையில் சாதாரணமாகப் பேசும் போது ‘அம்மா’ என்றே எப்போதும் ஜெயலலிதாவை குறிப்பிட்டுச் சொல்வது என் பழக்கம். எல்லோரும் அவரை அப்படி அழைப்பதற்கு முன்பே! இதை அவர் ஆட்சேபித்தது இல்லை. பெண்மணிகளை அப்படி அழைப்பது நம் வழக்கம் அல்லவா? ஒரு கட்டுரையில் முதல் தடவையாக அவரை ‘ஜெ’ என்று குறிப்பிட்டபோது, தன் பெயருக்கு இழுக்கு சேர்த்து விட்டதாக கோபம் கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். பொதுவாக உலகத் தலைவர்களைச் சுட்டும்போது அவர்களது பெயரின் முன் எழுத்தைக் குறிப்பிடும் பழக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி பதில் எழுதியபோது அமைதி ஆனார்..!

‘ஜெ’யிடம் எனது ஒரு சந்திப்பு 1996ல் அவரது தோல்விக்குப் பின் நடந்தது. “மறப்போம் மன்னிப்போம் கதைதானே! என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பத்திரிகைகளில் வெளியிட்டீர்களே” என்றார். “அது வேறு.. நீங்கள் அரசியல் தலைவியாக நிற்பது வேறு” என்றேன். அந்த பதில் அவருக்கு பிடித்திருந்தது. இன்னொரு கட்டத்தில் “நீங்கள் பிரதமராக வந்தால் எப்படி இருக்கும்? பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இலங்கை இவற்றை எப்படி அணுகுவீர்கள் என்று நினைத்துப்பார்க்கிறேன்” என்று சொன்னபோது அவர் சற்று சிரித்தார்.

இந்திய அளவில் உறுதிமிக்க ஒரு தலைவராக அவர் வர வாய்ப்பு இருந்தது. காலன் விடவில்லை. அநியாயம்.

ஜனவரி, 2017.